Wednesday, January 28, 2009

பார்சி இன மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

எனது குஜராத்தி நண்பர் ஒருவர் பார்சி இன மக்கள் இந்தியா வந்து சேர்ந்த கதை எனக்குக் கூறினார். அதில் ஒரு சிறந்த வாழ்க்கைப் பாடம் அடங்கி உள்ளது.

அதாவது, சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர், பார்சி இன மக்கள், தமது சொந்த மண்ணான பாரசீகத்தில் (ஈரான் ) இருந்து வெளியேற நேரிட்டது. அவர்கள், இந்தியாவில் அடைக்கலம் புகுவதற்காக கப்பலில் பயணம் செய்து , குஜராத் கரையோரம் இந்திய (குஜராத்)மன்னரிடம் அனுமதி கோரி காத்து இருந்தனர்.

அப்போது, குஜராத் மன்னர், தம் மண்ணில் ஏற்கனவே மக்கள் தொகை அதிகம் , மேலும் யாருக்கும் இடம் இல்லை என்று குறிப்பால் உணர்த்துவதற்காக ஒரு பால் நிறைந்த பாத்திரத்தை கப்பலுக்கு கொடுத்து அனுப்பினார்.

பார்சி மக்களோ , அப்பாத்திரத்தில் சிறிது சர்க்கரை இட்டு , மன்னருக்கே திருப்பி அனுப்பினார் .

அதன் குறிப்பானது . "நாங்கள் தனித்து தெரிய மாட்டோம் . பாரமாகவும் இருக்க மாட்டோம் . தங்களுடன் கலந்துவிடுவோம் . மேலும் தங்கள் வாழ்வுக்கும் சுவை கூட்டுவோம் ".


இந்த நூதனமான பதிலால் மகிழ்ச்சி அடைந்த மன்னர் , அவர்களை இந்தியாவிற்குள் (இந்திய கலாச்சாரத்தை பின் பற்ற வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளுடன்) அனுமதித்தார்.


அன்று முதல் இன்று வரை, அம்மக்கள், இந்தியகலாச்சாரத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டு, அதே சமயத்தில் தங்கள் தனித்துவத்தினையும் இழக்காமல் , வாழ்ந்து வருகின்றனர் .


அது மட்டுமல்ல. மிக சிறிய எண்ணிக்கையிலேயே இருந்தாலும் , இந்தியாவில் அவர்கள் பெருமளவிற்கு மதிக்கப் படும் ஒரு சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர்.


அணு சக்தி மேதை , ஹோமி பாபா , தொழில் அதிபர் டாடா ,பொருளாதார மேதை பெரோஸ் ஷா மேதா , ராணுவ தளபதி மனேக் ஷாச் போன்றோர் பார்சி இன மக்களே .


இதில் இருந்து நாம் கற்று கொள்ளவேண்டிய பாடம் என்ன?


இன்றைய தேதியில், பிறக்க ஒரு இடம் , பிழைக்க ஒரு இடம் என்பது வாழ்வியல் நியதி ஆகி விட்டது . அவ்வாறான சூழலில், நாம் வாழ வந்த பகுதியின் கலாச்சாரத்தினை மதித்து , மொழியினை (முடிந்த வரை) கற்றுக்கொண்டு, (அதே சமயத்தில் தங்கள் தனித்துவம் இழக்காமல்) அம் மக்களுடன் கலந்து வாழ்வோம் எனில் , பல பிரச்சினைகள் (உதாரணமாக தற்போதைய மராட்டியர் - வட இந்தியர் பிரச்சினை) தவிர்க்கப் படும்.

Source : http://sandhainilavaram.blogspot.com/2008/10/blog-post_13.html

எளியோரையும் மதிப்போம் !

  சமீபத்தில் ஒரு சிறு கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, ஒரு ஏழைச் சிறுவன் ஒரு பெரிய ஐஸ்க்ரீம் பார்லருக்கு செல்கிறான். அங்கு இருக்கும் ஒரு வெய்ட்டரிடம் ஒரு பிஸ்தா ஐஸ்க்ரீம் விலை கேட்கிறான். ஒரு குறிப்பிட்ட விலையை வெய்ட்டர் சொன்னதும் தன்னிடமுள்ள சிறு பையில் உள்ள காசுகளை எண்ணி பார்க்கிறான். பின்னர், இதை விட குறைவாக விலை உள்ள ஐஸ்க்ரீம் வேண்டும் எனவும் அதன் விலை என்ன என்றும் கேட்கிறான். வெய்ட்டருக்கு மிக எரிச்சல். மிகப் பெரிய கஸ்டமர்கள் காத்து கொண்டிருகிறார்கள். இந்த சிறு பையன் தனது நேரத்தை வீணடிக்கிறானே என்று.



ஒரு வழியாக , அந்த பையனின் அடக்க விலையில் ஒரு ஐஸ்க்ரீம் கிடைக்கிறது. விட்டது தொல்லை என்று எண்ணும் வெய்ட்ட்ர் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு அந்த பையன் சென்ற பிறகு அவனுடைய தட்டைப் பார்க்கிறார். அதில் ஐஸ்க்ரீம் விலையோடு அவருக்கான டிப்சும் இருக்கிறது. அந்த பையனிடம் இருந்த தொகையை கொண்டு அவனால் பிஸ்தா ஐஸ்கரிமே வாங்கி இருக்க முடியும் என்றாலும் கூட, வேயட்டருக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கதினாலேயே அந்த பையன் குறைந்த விலையில் உள்ள ஐஸ்க்ரீம் வாங்கி இருக்கிறான் என்று அவர் புரிந்து கொள்கிறார்.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் எனும் கருத்தினை கொண்ட இந்த கதை எனக்கும் கூட சில உண்மைகளை புரிய வைத்தது.

கொஞ்சம் யோசித்து பாருங்கள். பளபளக்கும் சூப்பர்/ஹைபெர் மார்கெட்டுகளில் மில்லி கிராம் தப்பாமல் எவ்வளவு பில் போட்டாலும் ஒன்றும் பேசாமல் பணம் நீட்டும் நாம் சந்தையில் இரண்டு ரூபாய்க்கு பேரம் பேசினாலும் கூட, நம்முடன் வந்திருக்கும் குழந்தையிடம் ஐந்து ரூபாய் மதிப்புள்ள பழத்தை அன்பாக (இலவசமாக) திணிக்கும் சிறு வியாபாரிகள்.

காரில் ஏற்படும் சிறு தொந்தரவுக்காக விசிடிங் சார்ஜ், இன்ஸ்பெக்சன் சார்ஜ், செக்கிங் சார்ஜ் (மனிதர் செய்யும் செக்கிங் இல்லாமல் கம்ப்யூட்டர் செக்கிங் வேறு) என்று கத்தியினை நமது பாக்கெட்டுக்கும் கழுத்துக்கும் வைக்கும் சர்விஸ் சென்டர்களுக்கு நடுவே வியர்க்க விறுவிறுக்க காரினை செக் செய்து, அதில் ஒரு பிரச்சினையும் இல்லை என்றால் பணம் வாங்க தயங்கும் (சில சமயங்களில் மறுக்கும்) கார் மெக்கானிக்குகள்.

இது மட்டுமல்ல, உறவினருக்காக மருத்துவமனையில் கவலையுடன் காத்திருக்கும் போது, கவலைபடாதீங்க, ஒண்ணும் ஆகாது என்று அன்பாக ஆறுதல் கூறும் (சிறு) மருத்துவமனை ஊழியர்கள்.

சிலரின் அகராதியில் பிழைக்க தெரியாதவர்கள் என்று பெயர் பெற்ற இவர்களுக்கு எத்தனை முறை நாம் ஒரு சக மனிதருக்கான மரியாதை கொடுத்திருக்கிறோம்? எத்தனை முறை அவர்களை நேருக்கு நேராக பார்த்து பேசி அவர்களின் அன்புக்கும் பெருந்தன்மைக்கும் மதிப்பு கொடுத்திருக்கிறோம்?

பணமும் பகட்டும் முக்கியம் அல்ல. மனமும் அதில் உள்ள நல்ல குணங்களுமே முக்கியம் என்றும் கதைகளின் உதவி இல்லாமலேயே நமக்கு உணர வைக்கும் இத்தகைய எளியோர் மன்னிக்கவும் இத்தகைய பெரியோரையும் மதிப்போமே.

Source : http://sandhainilavaram.blogspot.com/2008/11/blog-post_05.html

இது ஒரு (வாழ்க்கை) சமையல் குறிப்பு -copied

மூன்று சம அளவு பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றிலும் நீரை ஊற்றுங்கள். ஒரு பாத்திரத்தில் கேரட், இன்னொரு பாத்திரத்தில் முட்டை மற்றும் கடைசி பாத்திரத்தில் கொஞ்சம் காஃபி பொடி போடுங்கள். அனைத்து பாத்திரங்களையும் சுமார் பதினைந்து நிமிடங்கள் சூடு படுத்துங்கள். என்னடா இது? புது வகை சமையல் குறிப்பாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இதில் ஒரு சுவையான வாழ்க்கை தத்துவம் அடங்கி உள்ளது.

எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை பாதை எப்போதுமே எளிமையானதாகவும் சந்தோசமானதாகவும் அமைந்து விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் கடும் போட்டிகளையும், சில சமயங்களில் பயங்கர விரோதங்களையும் கூட சந்திக்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக, புதிய அலுவலகம், புதிய தொழில், புதிய உறவுகள் மற்றும் புதிய இருப்பிடங்களில் ஏற்படும் சில கசப்பான அனுபவங்கள். இத்தகைய கடினமான சூழல்களில் நாம் கொதி நீரில் வீழ்ந்து கிடப்பது போல துடித்துப் போகிறோம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களையும் அவற்றை ஏற்படுத்தும் சுற்றத்தாரையும் (சமூகம்) ஒவ்வொருவரும் மூன்று வகையாக எதிர்கொள்ளலாம்.

முதல் வகையானவர்கள் கேரட் போன்றவர்கள். இவர்கள் சுற்றத்தாருடன் போராடி பிரச்சினைகளைத் தீர்த்து விடலாம் என்று எண்ணும் கடினமான இறுக்கமான மனதுடையவர்கள். ஆனால் சுற்றம் (சமூகம்) இவர்களை விட மிகவும் பெரியது . அவற்றில் உள்ள பிரச்சினைகளும் மிகவும் வலிமையானவை. எனவே அந்த பிரச்சினைகள் பெரும்பாலும் இவர்களைத் தீர்த்து விடுகின்றன. தொடர்ந்து போராடுவதன் மூலம் இவர்கள் துவண்டு போய் விடுகிறார்கள். இறுதியாக உறுதி குலைந்து தோல்வியில் துவண்டு போய் விடுகிறார்கள்.

இரண்டாம் வகை முட்டை போன்றவர்கள். இவர்கள், ஏதோ அட்ஜஸ்ட் செய்து கொண்டு போய் காலத்தை தள்ளி விடலாம் என்று எண்ணும் வழவழ கொளகொள ஆசாமிகள். சுற்றத்தாரை இளகிய மனதுடன் எதிர் கொள்கிறார்கள். ஆனால், பிரச்சினைகளை தீர்க்க இளகின மனது மட்டும் போதாது. பிரச்சினைகளை சரிவர புரிந்து கொள்ளும் திறமை வேண்டும். பெரும்பாலும் சுற்றத்தார் இவர்களது இளகிய மனதை சரிவர புரிந்து கொள்வதில்லை. மாறாக தொடர்ந்து வரும் பிரச்சினைகள் இவர்கள் மனதை இறுக்கி விடுகின்றன. இறுதியாக உலகத்தைக் குறை கூறுபவர்களாக இவர்கள் மாறி விடுகிறார்கள்.

மூன்றாம் வகையினர் காஃபி பொடி போன்றவர்கள். இவர்கள் ஆளுமை குணம் மிக்கவர்கள். சுற்றத்தார் இவர்களின் சொந்த குணத்தை மாற்ற இவர்கள் அனுமதிப்பதில்லை. பிரச்சினைகளின் சந்திக்கும் போது இவர்கள் தன் ஆளுமைத் திறத்தை வெளிப் படுத்துகிறார்கள் (மணம் வீசுகிறார்கள்). சுற்றுப் புற சூழ்நிலையை இவர்கள் (விரும்பும்) குணத்திற்கு மாற்றுகிறார்கள். சுற்றத்தைப் (சமூகத்தை) புரிந்து கொண்டு அதோடு கலந்து வாழ்ந்து, வாழும் சூழலையே இவர்கள் மணம் வீச செய்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?

ஒரு கப் காஃபி குடித்துக் கொண்டே யோசியுங்கள்.

Source :  http://sandhainilavaram.blogspot.com/2008/12/blog-post_17.html