Wednesday, March 18, 2009

ஜெய்.. ஹொ. ஹொ ஹொ ஹி ஹி..

இந்தியா 15வது மக்களவைக்கான் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சமயத்தில் தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்க்காக அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகள் பிரச்சாரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செலவுகள் ரூ10,000 கோடியை தாண்டும் என செய்திகள் வருகின்றன. பல அரசியல் கட்சிகள் தேர்தலில் செய்யும் செலவுகள் கோடிக்கணக்கில் தேர்தல் ஆணையம் எத்தனை சட்டம் போட்டாலும் செலவுகளை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. பெரும்பாலன அரசியல் கட்சிகள் தேர்தல் செலவை முதலீடாகவும் அரசதிகாரம் கிடைத்தபின்பு மக்களுக்கு செல்லவேண்டிய பணத்தை அறுவடைசெய்துகொள்கிறார்கள். இந்தியாவில் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதியின் முக்கிய ஊற்று நாட்டின் பெருமுதலாளிகள். சமீபத்தில் FICCI மற்றும் ASSOCHEM போன்ற கூட்டமைப்புகள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தேர்தல் நிதி சம்பந்தமாக கடிதம் எழுதியுள்ளனர். அதாவது தாங்கள் கட்சிகளுக்கு அளிக்கின்ற தேர்தல் நிதி வெளிப்படையாக இருக்கவேண்டுமாம் அதனால் அமெரிக்காவைப் போன்று Polical Action Commitee (PAC) ஏற்படுத்தி அதன் மூலம் கட்சிகள் பெறும் வாக்குவிகித அடிப்படையில் நிதியை பிரித்துத்தரப்படவேண்டுமாம்.


முதலில் இந்திய ஜனநாயகத்தின் மீதும் தேர்தல் மீதும் ஏன் இந்த முதலாளித்துவ அமைப்புகள் அக்கறை கொள்கின்றனர். மேலும் அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் ஏன் நிதி அளிக்கவேண்டும் என கேள்விஎழுகிறது. அரசியல் கட்சிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு என்ன? இந்திய நாட்டில் செயல்படும் அரசியல் கட்சிகள் மக்களுக்காக நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களைக் காக்க மட்டும் செயல்படுமேயானால் கார்ப்பரேட்டுகள் தரும் தேர்தல் இன்னபிற நிதியை ஏற்கக்கூடாது. இந்திய நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு அரசியல் கட்சிகள் செயல்படும் விதம் பற்றி அறியாமல் உள்ளனர். அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் ஒதுங்கியிருப்பதால் பல அரசியல் கட்சிகள் மகிழ்ச்சிகொள்கின்றன. கேள்வி கேட்காதவரை அவர்களுக்கு பிரச்சனையில்லை,ஊடகங்களும் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் DNA என்ற அமைப்பு இந்தியாவில் தேர்தல் நிதி என்ற பெயரில் அரசியல் கட்சிகள் நாட்டிம் பெருமுதலாளிகளிடம் பெற்ற நிதி விவரங்களை வெளியிட்டுள்ளது, இந்தியாவில் CPI-M,CPI கட்சிகள் தவிர மற்ற எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதியை பெருமுதலாளிகளிடமிருந்து பெற்றுள்ளன. சென்ற ஆண்டில் அரசியல் கட்சிகளின் வருமானவரி தாக்கல் வெளிப்படையாக கொடுக்க CPI-M &CPI தவிற எல்லா அரசியல் கட்சிகளும் மறுத்துவிட்டன.http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=c588cb0c-1450-43a8-8a3c-72f1c0972e8c


சமீபத்தில் பாஜக வின் தில்லி அலுவலகத்தில் ரூ2.6 கோடி பணம் களவுபோய்விட்டதாக செய்தி வந்தது ஆனால் புகார் எதுவும் செய்யவில்லை ஏனென்றால் அது கள்ளப்பணம் கணக்கில் வராத பணம் திருடியவனை சட்டபூர்வமாக ஒன்றும் செய்ய முடியாமல் திருடனுக்கு தேள்கொட்டிய கதையாகிவிட்டது.


பெரிய தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் 2003-2007 இடைப்பட்ட காலத்தில் மட்டும் தலா ரூ 52 கோடிக்கும் மேல் பெற்றுள்ளனர். இப்படி பெறப்பட்ட நிதிக்கு எவ்வாறு கைமாறு செய்கிறார்கள்? கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் வாஜ்பாயி தலைமையிலான ஆட்சியிலும் தற்போது நடைபெற்றுவரும் மன்மோகன் ஆட்சியிலும் முன்னெப்பபோதும் இல்லாத அளவிற்கு நாட்டில் உலகமயத்தின் பெயரால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன, நாட்டில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தங்கள் மூலதனத்தை பல மடங்கு பெருக்கியுள்ளனர்.ஆசியாவிலேயே இந்தியாவில் தான் அதிக பண்க்காரர்கள் உள்ளனர் வறுமைக்கோடிற்கும் கீழேயும் அதிக மக்கள் நம் நாட்டில் தான் உள்ளனர். நாட்டின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில் நமது நிதியமைச்சர் பெருமுதலாளிகளிடம் கலந்தாலோசிக்காமல் முடிவெடுப்பதில்லை.வரிஏய்ப்பை மறைக்கவும்,வரிபாக்கிவைப்பவர்களைக் காப்பற்றவும் வராக்கடன்களின் மேல் நடவடிக்கை எடுக்காமலிருக்கவும் தனியார்மயமாக்கத்தில் கருணை காட்டுவதிலும் இன்னபிற விசயங்களில் கைமாறு செய்யப்படுகிறது.


2003 முதல் 2007 வரை நிதியளித்த முக்கிய நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும்.http://www.dnaindia.com/report.asp?newsid=1236392


ஆதித்ய பிர்லா-

காங்கிரசுக்கு- ரூ 21.71 கோடி

பாஜகவிற்கு- ரூ 2.96 கோடி


ஸ்டெர்லைட் குழுமம்

பாஜகவிற்கு- ரூ 9.5 கோடி (2000ம் ஆண்டில் BALCO நிறுவனத்தின் 51% பங்குகளை பெற்ற போது காங்கிரசிற்கு ரூ 1 கோடியும் பாஜகவிற்கு ரூ 50 இலட்சமும் தரப்பட்டது)


வீடியோகான்

காங்கிரசுக்கு- ரூ 4.50 கோடி

பாஜகவிற்கு- ரூ 3.50கோடி

சிவசேனாவிற்கு ரூ 2.63 கோடி


டாடா

காங்கிரசுக்கு- ரூ 4.32 கோடி

பாஜகவிற்கு- ரூ 2.67 கோடி

சிவசேனாவிற்கு ரூ 60.94 இலட்சம்

தெலுங்கு தேசத்திற்கு ரூ48.48 இலட்சம்


அதானி குழுமம்(குஜராத்)

பாஜகவிற்கு- ரூ 4 கோடி

காங்கிரசுக்கு- ரூ 20 இலட்சம்


ஐடிசி

காங்கிரசுக்கு- ரூ 1.45 கோடி

பாஜகவிற்கு- ரூ 1.38 கோடி

சிவசேனாவிற்கு ரூ 12 இலட்சம்

சமாஜ்வாதி கட்சிக்கு ரூ36இலட்சம்

தெலுங்கு தேசத்திற்கு ரூ 14.5 இலட்சம்

ஐக்கிய ஜனதாதள் - ரூ8 இலட்சம்

அதிமுகவிற்கு - ரூ 5 இலட்சம்


எல்&டி குழுமம்

காங்கிரசுக்கு- ரூ 1 கோடி

பாஜகவிற்கு- ரூ 1.60 கோடி

சிவசேனாவிற்கு ரூ 35 கோடி


மஹிந்திரா குழுமம்

ரூ 2.20 கோடியை காங்கிரஸ், பாஜக சிவசேனா மற்றும் தெலுங்கு தேசத்திற்கு பிரித்துக்கொடுத்துள்ளது.


பாஜாஜ்

பாஜகவிற்கு- ரூ 1 கோடி

காங்கிரசுக்கு- ரூ 1 கோடி


ஜிண்டால்

காங்கிரசுக்கு- ரூ 1 கோடி

பாஜகவிற்கு- ரூ 75 இலட்சம்


ஜிஎம்ஆர் குழுமம்

பாஜகவிற்கு- ரூ 1 கோடி

காங்கிரசுக்கு- ரூ 25 இலட்சம்


விஜய் மல்லயா

பாஜகவிற்கு- ரூ 1 கோடி (2004-05 வருடம்)


அம்பானிகள் “அளி”த்ததைப்பற்றி தகவல் இல்லாவிட்டாலும் பெரிய டோனர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.


பாமக வும் ரூ2.86 கோடியை பெற்றுள்ளது யாரிடமிருந்து என் தெரியவில்லை.


இந்தப்பட்டியல் நீண்டுகொண்டேயிருப்பதால் தயைகூர்ந்து இணைத்துள்ள லிங்கைப் படிக்கவும்


source : http://arivoliiyakkam.blogspot.com/2009/03/blog-post_12.html


Saturday, March 14, 2009

வாழ்க்கையின் பொருள் !!!

வாழ்க்கையின் பொருள் பற்றி சமீபத்தில் நான் படித்த ஒரு கதை இங்கே.

ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர்.

அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது.

அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்பைகள் அழகானவை, சில கோப்பைகள் விலை உயர்ந்தவை, வேறு சிலவோ பிரத்யேகமாக கலை அழகோடு வடிவமைக்கப் பட்டவை.

அந்த மாணவர்கள், அழகற்ற கோப்பைகளை தவிர்த்து விட்டு அழகிய கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்புகின்றனர். கலை வடிவம் மிக்க தேநீர் கோப்பைக்காக அவர்களிடையே சிறிய போட்டி கூட நடக்கிறது.

ஒருவழியாக, தமக்கான கோப்பையை தேர்வு செய்து, மாணவர்கள் அனைவரும் தேநீர் அருந்தும் போது அங்கு வந்த பேராசிரியர் சிறிய விளக்க உரை நிகழ்த்துகிறார். அது இங்கே.

"ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். நீங்கள் அனைவரும் அழகில் சிறந்த, விலை உயர்ந்த கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்பினீர்கள். ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கென சிறந்ததையே தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இது மிகவும் இயல்பான விஷயம்தான் என்றாலும் பல பிரச்சினைகளின் மூல காரணம் அதில்தான் உள்ளது.

நீங்கள் கஷ்டப் பட்டு போராடி தேர்வு செய்த கோப்பைகள், தேநீருக்கு எந்த ஒரு தனிச் சுவையையும் கூட்ட வில்லை. சொல்லப் போனால், கலைநயம் மிக்க சில கோப்பைகள், எளிதில் தேநீர் அருந்த, அதன் சுவையை முழுமையாக உணர தடையாகவே இருந்தன.

உண்மையில், என் வீட்டிற்கு நீங்கள் வந்தது சுவையான தேநீரை அருந்தவே. கலை நயம் மிகுந்த கோப்பைகளை உபயோகிக்க அல்ல.

ஆனாலும், தேநீர் அருந்த வந்த உங்கள் கவனம், கோப்பைகளைப் பார்த்தவுடன் திசை மாறி விட்டது. அதிலும், உங்கள் கையில் உள்ள கோப்பை மீது இருந்த கவனத்தை விட அடுத்தவர் கையில் என்ன கோப்பை உள்ளது என்பதில்தான் அதிக கவனம் இருந்தது.

நண்பர்களே! இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க்கை என்பது கூட சுவையான தேநீர் போன்றது. இடையில் வந்து போகும் பதவி, பணம், புகழ் எல்லாமே, அந்த வாழ்க்கையை தாங்கிப் பிடிக்க உதவும் கோப்பைகள் மட்டுமே.

மேற்சொன்ன பணம் பதவி போன்ற விஷயங்கள் எதுவும் வாழ்க்கை எனும் தேநீரின் சுவையை மாற்றுவதில்லை. ஆனால் பல சமயங்களில், கோப்பைகளில் அதிக கவனம் செலுத்தும் நாம் வாழ்க்கையை முழுமையாக சுவைக்க மறந்து விடுகிறோம். பலர் இது போல காலப் போக்கில் வாழ்க்கை எனும் தேநீரின் உண்மையான சுவை மறந்து போய் இயந்திரகதியாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்! மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களுக்கு எல்லாவற்றிலும் உயர்ந்த விஷயங்கள் கிடைப்பதில்லை. அவர்கள் தங்களுக்கு கிடைத்த தேநீரை முழுமையாக சுவைப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதை தாங்கிப் பிடிக்கும் கோப்பைகளில் அல்ல.

அதிகமான பொருட்கள் வைத்திருப்பவன் உண்மையான பணக்காரன் இல்லை. குறைவாக தேவைகள் உள்ளவனே பெரிய பணக்காரன். "

இவ்வாறு அவர் உரைத்ததும், அந்த மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றி கொஞ்சம் விளங்கியது போல இருந்தது. இந்த முறை தேநீரின் சுவையை முழுமையாக ருசித்து பின்னர் கலைந்து போனார்கள்.

எனக்கு இந்த கதை பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாருங்கள். ஒரு நல்ல டீ சாப்பிட்டுக் கொண்டே யோசிப்போம்.

Source : http://sandhainilavaram.blogspot.com/2009/03/blog-post_12.html

Monday, March 2, 2009

நான் கடவுளா??!!


இல்லை , நான் எழுதப் போவது திரைப்பட விமர்சனம் அல்ல.கடவுள் நம்பிக்கை ,ஜோதிடம் ,மதம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றி ஆளாளுக்கு பதிவுகளை போட்டு பயங்கரமாய் விவாதம் செய்கிறபோது நான் மட்டும் தேமேயென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் கருத்து கந்தசாமி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன நான் கொஞ்சம் லேட். கடவுள் ,மதம் என்பது எல்லாம் தனி நபர் நம்பிக்கை என்றெல்லாம் ஜல்லியடிக்கப் போவதில்லை.இது ஒரு குழப்பமான விஷயம்.இருக்குப்பா என்று சொன்னால்சில பேர் படித்து விட்டு போவார்கள் ,இல்லை என்று சொன்னால் போதும் நிறைய பேர் படிப்பதோடு மட்டுமல்லாமல் கமென்ட் பண்ணுவார்கள் என்று நினைத்து இந்த பதிவை போடவில்லை (நம்ம்புங்க சார்).
கடவுள் நம்பிக்கை என்பதை அடிப்படையாக வைத்து மக்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள்,ஆஸ்திகர்கள்,நாஸ்திகர்கள்,ஆஸ்திகநாஸ்திகர்கள் (அதாவது ரெண்டுங்கெட்டான்). விபரம் தெரியாத வரை எல்லோரும் ஆஸ்திகர்களே,கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் சில பேர் நாஸ்திக கரை ஒதுங்குவார்கள் தைரியமாக,பலர் ஆஸ்திகர்கள்,என்னைப் போன்று நட்டாத்தில் நின்று கொண்டு எந்த பக்கம் ஒதுங்குவது என்று பேந்தப் பேந்த முழிப்பவர்களுக்கு இந்த பதிவு.ஓவர் பில்ட் அப் வேண்டாம் விஷயத்திற்கு வருகிறேன்.
கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும், அல்லது யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கக் கூடும்.தனி ஒரு மனிதன் ஒரே நாளில் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்க முடியாது.இயற்கையிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் ,தன்னை விட சக்தி வாய்ந்ததான ஒன்றைப் பணிந்து வணங்கும் பழக்கத்தின் அடிப்படை என்னவாக இருக்க முடியும்?உயிர் பயம்.அல்லது காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதனை வழிக்கு கொண்டு வர யாராலோ ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை.நாளடைவில் அதற்குப் பல்வேறு முகங்கள் ஏற்பட்டு விரிவடைந்திருக்க வேண்டும்.சடங்குகளை ஏற்படுத்தி அதை தொடர்வதால் உண்டாகும் நன்மைகளின் பட்டியல் ஏற்பட்டு விட்டது இப்போது.
கடவுள் இருக்கிறாரா இல்லையா?என்று யோசிக்கக் கூடத் தயாராக இல்லை பலர்.என் நண்பர் ஒருவரிடம் சில வருடங்களுக்கு முன் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சொன்னது,"உன் தாய் கற்புடையவள் என்பதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளாய்? பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் நீதான் என்பதை எப்படி நம்புகிறாயோ அப்படித்தான் இதுவும்"என்று கொதித்தார்.sensitive விஷயம்.
எங்கும் நிறை பரப்ரம்மம்,ஆதியும் அந்தமும் இல்லாத,இது என்னவாக இருக்க முடியும்?அறிவியல் ரீதியாக கதிர் வீச்சு இல்லாத பொருள்களே இல்லை என்கிறார்கள் .மரம் ,செடி கொடிகளில் இருந்து மனிதன் வரை.காந்தக் கதிர் வீச்சுக்கள் அல்லது magnetic field , அல்லது ஆரா Body என்று அழைக்கப்படும் . இது மனிதனின் ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது .இது பாதிக்கப் பட்டால் உடல் நோயுறும் என்கிறார்கள். இது வேறொன்றுமில்லை ,நம் உடல் சேகரித்து வைத்திருக்கும் cosmic energy தான்.ஒரு பாட்டரி போல. ஆக வெளியில் இருப்பதுதான் உள்ளேயும் இருக்கிறது ,அல்லது எங்கும் இருக்கிறது.
சரி இதில் கடவுள் எங்கே வருகிறார் ?எங்கேயும் வரவில்லை.இருப்பதெல்லாம் மனிதன் மட்டுமே.இந்த cosmic energy என்பதைக் கொண்டு நிறைய விஷயங்கள் பண்ணலாம்.நோய்களை குணப்படுத்துவது உட்பட.சாமியார்கள் செய்வது இதைத்தான்.ஆனால் இது எல்லாராலும் முடியும்.ஜப்பானியர்கள் இதை reiki என்று பெயரிட்டு இதை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள்.மனோ சக்தி பல அற்புதங்களைச் செய்யக்கூடியது.ரெய்கியின் அடிப்படைத் தத்துவம் அதுதான்,cosmic energy யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்,உங்கள் மனம் அதற்கு எந்த அளவு உபயோகப்படும் என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் இந்த தத்துவத்தை எளிதாக சொல்லப் போய் அது கை கால்கள் முளைத்து வேறு வடிவத்துக்கு வந்து விட்டது.சரி அப்படியென்றால் கோவில்கள் எதற்கு?அவை எனர்ஜியை சேமிக்கும் பெரிய பாட்டரி.கோவிலுக்கு போனால் அது உங்களுக்குள் புகும் என்பதால்தான்.உங்களிடம் இருந்து கோவிலுக்குள்ளும் பரவும்.அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு.எனவேதான் பழைமையான கோவில்களில் ஒரு தனி நிம்மதி relaxation ஐ உணர்கிறீர்கள் .புதிதாக கட்டப்பட்ட கோவில்களில் அது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.
சரி நாம் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறுவது எப்படி ? அல்லது நிறைவேறாமல் போவது எப்படி?என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஒரு சரியான, மனம் ஒருமுகப்பட்ட , பிரார்த்தனை நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அது அந்த இடத்தில் பல மடங்காக replicate ஆகிறது .அப்படி பிரார்த்தித்தால் கோவிலில்தான் என்று இல்லை எங்கும் அது நிகழ வாய்ப்பு உண்டு.செயல்படுவது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது.இதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம்.ஏனெனில் இந்தப் பதிவைப் படிக்கும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும் எனக்கு எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாதுன்னு.
இருப்பினும் சுருக்கமாக சொல்ல முயற்சித்தால், நீங்கள் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு காந்த சக்திப் புலத்தை, அதன் செயல்களை எளிதாகச் சொல்ல முன்னோர்கள் கையாண்ட விதம் வேறொன்றாக மாறி அல்லது மாற்றி புரிந்துகொள்ளப்பட்டு வேரூன்றி கிளை பரப்பி அசைக்க முடியாமல் ஆகிவிட்டது இப்போது.அதற்காக ஏற்படுத்தப்பட்ட சில வழிமுறைகள் மருவி வெறும் சடங்காக மாறி விட்டது.கையில் இருப்பது வெறும் சாவிதான்.எந்தப் பூட்டை திறக்கும் என்கிற விவரத்தையெல்லாம் எப்போதோ தொலைத்தாயிற்று.